ரணிலுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்குவதில் சிக்கல் இல்லை – பிரசன்ன ரணதுங்க!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு மீண்டும் வாய்ப்புகள் வழங்குவதில் எந்த சிக்கலும் இல்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. இது சம்பந்தமாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் கூறப்படுகின்றன்றது.
இந்நிலையில், இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள பிரசன்ன ரணதுங்க, நாம் தேர்தலுக்குச் செல்வதா இல்லையா என்பது நாட்டின் பொருளாதார நிலை மற்றும் இதர சட்ட அம்சங்களைப் பொறுத்தே தீர்மானிக்கப்பட வேண்டும் எனக் கூறினார்.
அரசாங்கமோ அல்லது நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையோ தேர்தலுக்குச் செல்லத் தீர்மானித்தால் அது தேசியமட்டத் தேர்தலாக இருக்க வேண்டுமே தவிர மாகாண மட்டத் தேர்தல்களை நடத்துவதற்கான நேரம் இதுவல்ல எனவும் அவர் கூறினார்.
மேலும் இந்த தருணத்தில் தேர்தலை நடத்துவதை விட பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதற்கான வேலைத்திட்டத்தை மக்கள் நடைமுறைப்படுத்த விரும்புகிறார்கள் என நான் நினைக்கிறேன் எனவும் அவர் கூறினார்.
ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்படும் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி என்ற வகையில் தீர்மானம் எடுக்கும். எமக்குப் பொருத்தமான வேட்பாளர் இல்லை என்றால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கே சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என பெரும்பான்மையான மக்கள் கருதினால் அதனை எமது கட்சி கவனத்தில் கொள்ளும் என நினைக்கின்றேன்” எனத் தெரிவித்துள்ளார்.