ஐரோப்பாவில் ரயில்களை விட விமானத்தில் செல்வது இலாபமாம்!
ஐரோப்பாவில் விமான பயண சேவைகளை விட ரயில் பயண சேவைகளுக்கு அதிகளவு பணம் செலவாகுவதாக ஆய்வொன்று கண்டறிந்துள்ளது.
கிரீன்பீஸ் மேற்கொண்ட ஆய்விலேயே இந்த விடயம் அம்பலமாகியுள்ளது. ஆய்வின் படி வெவ்வேறு திகதிகளில் ஐரோப்பா முழுவதும் 112 வழித்தடங்களில் உள்ள விமானங்கள் மற்றும் ரயில்களின் டிக்கெட் விலைகளை ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டுள்ளது.
இதன்படி ஐரோப்பாவில் நீண்ட தூர ரயில் பயணத்தின் செலவு விமானத்தில் செல்வதை விட 30 மடங்கு அதிகம் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
ரயில் பயணச்சீட்டுகள் சில நேரங்களில் நான்கு மடங்காக உயர்ந்து, பறக்கும் கட்டணத்தை விட இரட்டிப்பாக இருப்பதாக அறிக்கை கண்டறிந்துள்ளது.
விலையுயர்ந்த யூரோஸ்டாரை எடுத்துக்கொண்டு இங்கிலாந்தில் இருந்து ஐரோப்பாவிற்கு செல்லும் ரயில் பயணங்கள், விமான டிக்கெட்டுகளின் விலையை விட நான்கு மடங்கு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதேபோல் ஸ்பெயினில், பகுப்பாய்வு செய்யப்பட்ட 71% வழித்தடங்களில் விமானங்களில் பயணம் செய்வது மலிவானது எனவும் கூறப்பட்டுள்ளது.
பிரித்தானியா, ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி மற்றும் பெல்ஜியம் ஆகியவை விமானங்களுடன் ஒப்பிடும்போது விலையுயர்ந்த ரயில் டிக்கெட்டுகளைக் கொண்ட நாடுகளாக அந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இரண்டு போக்குவரத்து முறைகளிலும் விலை உயர்வை ஒப்பிட்டுப் பார்க்கையில், லண்டனில் இருந்து பார்சிலோனாவுக்கு கடைசி நிமிட முன்பதிவின் போது, விமானங்களை விட, ரயில் டிக்கெட்டுக்களின் விலை, 29.6 மடங்கு உயர்ந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.