வடகொரியா எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க ராணுவ வீரர்!
அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர் அத்துமீறி வடகொரிய எல்லைக்குள் நுழைந்திருக்கிறார். தற்போது அவரை கைது செய்துள்ள ராணுவம் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகிறது.
சர்வதேச நாடுகளின் நாட்டாமை நான்தான் என்று கடந்த காலத்தில் அமெரிக்கா போட்ட ஆட்டம் கொஞ்சம் நஞ்சமல்ல. இதுவரை 81 நாடுகளின் அரசாங்கங்களை கவிழ்ப்பதில் அமெரிக்கா நேரடியாகவோ, மறைமுகமாகவோ சம்பந்தப்பட்டிருப்பதாக ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் குற்றம்சாட்டியுள்ளன. இந்நிலையில் ‘நேட்டோ’ மூலம் ஆசிய நாடுகளில் கால் பதிக்க அமெரிக்கா தொடர்ந்து முயன்று வருகிறது. அது ஒருபக்கம் இருக்க இதற்கான சோதனை முயற்சியை உக்ரைனை கொண்டு மேற்கொண்டுள்ளது.
ஒருவேளை உக்ரைனை நேட்டோவில் இணைப்பதில் வெற்றிபெற்றுவிட்டால் ரஷ்யாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும். அதேபோல தென் கொரியாவிலும் நேட்டோ நிலை நிறுத்தப்பட்டுள்ளது. மட்டுமல்லாது ஏதாவது ஓர் பெயரை வைத்துக்கொண்டு இரு நாடுகளும் அடிக்கடி ராணுவ பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன. இது வடகொரியாவுக்கு நேரடி அச்சுறுத்தல். எனவே இதனை சமாளிக்க வடகொரியாவும் தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. ஆக இப்படியாக இரு நாடுகளும் மாறி மாறி மோதிக்கொண்டு இருக்கும் நிலையில் தான் சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது.
அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர் தென் கொரியாவிலிருந்து, அத்துமீறி வடகொரியாவுக்குள் நுழைந்திருக்கிறார். டிராவிஸ் கிங் எனும் 23 வயது அமெரிக்க ராணுவ வீரர் கடந்த 2021ம் ஆண்டு முதல் ராணுவத்தில் பணியாற்றி வந்திருக்கிறார். இவர் தென்கொரியாவில் நிலை நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க ராணுவ படையில் சுழற்சி முறையில் பணியாற்றி வருகிறார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் வாய் தகறாரில் ஒருவரை சரமாரியாக தாக்கிய வழக்கில் 2 மாத காலம் சிறையில் கழித்திருந்தார்.
இந்நிலையில், சிறையிலிருந்து வெளியான பின்னர் வடகொரியாவில் அத்துமீறி ஊடுருவியுள்ளார். இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், “டிராவிஸ் வடகொரியாவின் பன்முன்ஜோம் கிராமத்தில் உள்ள ஓர் கட்டிடத்திற்கு கத்திக்கொண்டே ஓடினார். நாங்கள் இதனை முதலில் காமெடியாக பார்த்தோம். ஆனால் அவர் மீண்டும் திரும்பவேயில்லை. அதன் பின்னர்தான் இது ஒரு தீவிர பிரச்னை என்பது எங்களுக்கு புரிந்தது” என்று கூறியுள்ளனர்.
இது குறித்து அமெரிக்க அதிகாரிகள் கூறுகையில், “எங்கள் வீரர் வடகொரிய ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டுள்ளார் என்று நம்புகிறோம். அவரை மீட்க பேச்சுவார்த்தைகள் தொடங்கப்படும்” என்று கூறியுள்ளார். இதற்கு முன்னர் வடகொரியாவில் கைது செய்யப்பட்ட அமெரிக்க வீரர்கள் யாரும் உருப்படியாக நாடு திரும்பியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.