தன்பாலின ஈர்ப்பாளர்கள் குறித்த புத்தகம் விற்பனை ; 1.8 கோடி அபராதம்
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஹங்கேரியின் 2வது மிகப்பெரிய புத்தக நிறுவனம் லிரா கொனுவ். இந்த புத்தக நிறுவனம் ஹங்கேரியின் பல்வேறு நகரங்களில் புத்தக விற்பனை நிலையங்களை திறந்துள்ளது. இந்த புத்தக விற்பனை நிலையங்களில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் குறித்த புத்தகத்தை விற்பனை செய்ததாக அந்த புத்தக கடைக்கு 27 ஆயிரத்து 500 பவுண்ட் (இலங்கை மதிப்பில் 1கோடியே 8லட்சம் ) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ‘ஹாட்ஸ்டாபர்’ என பெயரிடப்பட்டுள்ள அந்த புத்தகத்தில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் குறித்த புகைப்படங்கள், கருத்துக்கள் இடம்பெற்றுள்ளது.
இந்த புத்தகத்தை இளைஞர் இலக்கியம் பிரிவில் வைத்ததாகவும், புத்தகத்தை பிளாஸ்டிக் கவர் கொண்டு மூடாததற்கும் இந்த அபாரதம் விதிக்கப்பட்டுள்ளது. ஹங்கேரியில் 2021ம் ஆண்டு கொண்டு வந்த குழந்தை பாதுகாப்பு சட்டத்தின் படி, விளம்பரம், இலக்கியம், தொலைக்காட்சி, திரைப்படங்களில் தன்பாலின கருத்துக்கள், புகைப்படங்களை சிறுவர்கள், சிறுமியர்களுக்கு வெளிப்படுத்துவது குற்றமாகும். அந்த சட்டத்தின்படி, தன் பாலின ஈர்ப்பாளர்கள் குறித்த புத்தகத்தை விற்பனைக்கு வைத்திருந்ததற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.