உணவு கிடைப்பதை அச்சுறுத்தி உலகை மிரட்ட ரஷ்யா முயற்சி! ஷெலென்ஸ்கி குற்றம்சாட்டு
கிரிமியா பகுதியை ரஷ்யாவுடன் இணைக்கும் பாலத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து ரஷ்யாவின் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
ரஷ்யாவுடன் வலுக்கட்டாயமாக இணைக்கப்பட்ட உக்ரைனின் கிரிமியா பகுதியை இணைக்கும் பாலத்தின் மீது உக்ரைன் நடத்திய வான்வழித் தாக்குதலில் இரண்டு தம்பதிகளும் அவர்களது குழந்தையும் கொல்லப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து, உக்ரைனில் உற்பத்தி செய்யப்படும் தானியங்களை கருங்கடல் வழியாக பாதுகாப்பாக கொண்டு செல்வதை உறுதி செய்யும் ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக ரஷ்யா அறிவித்தது.
இதையடுத்து, உக்ரைனின் தெற்கு மற்றும் கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் ஆளில்லா விமானங்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒடெஸாவின் தெற்கு துறைமுகம் மற்றும் மைகோலெய்வ், டொனெட்ஸ்க், கெர்சன், சபோரிஜ்ஜியா மற்றும் டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் ஆகிய பகுதிகள் ரஷ்ய ஆளில்லா விமானத் தாக்குதல்களால் குறிவைக்கப்பட்டுள்ளன.
பெலாஸ்ரிக் ஏவுகணைகளைப் பயன்படுத்தி பொல்ரோவா, செர்காசி, டினிப்ரோபெட்ரோவ்ஸ்க், கெர்கிவ் மற்றும் கிரோவோஹ்ராட் போன்ற பகுதிகளில் ரஷ்யா தாக்குதல் நடத்தியது.
அதேநேரம், ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி கிரிமியா பகுதியில் தாக்குதல் நடத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும், உக்ரைன் அனுப்பிய 28 ஆளில்லா விமானங்கள் தாக்கி அழிக்கப்பட்டதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.
இதனிடையே, உணவு கிடைப்பதை அச்சுறுத்தி உலகை மிரட்ட ரஷ்யா முயற்சிப்பதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஷெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், எந்தவொரு நாட்டின் உணவுப் பாதுகாப்பையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை என்றும், ரஷ்ய மிரட்டலுக்கு அடிபணியாது என்ற செய்தியை உலக நாடுகள் தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.