ONMAX DT திட்டத்தின் மூலம் பணமோசடி : 95 வங்கி கணக்குகள் முடக்கம்!
ONMAX DT பிரமிட் திட்டத்தைச் சேர்ந்த 95 வங்கிக் கணக்குகளை முடக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களாக அடையாளம் காணப்பட்ட ஆறு நபர்களின் வங்கி கணக்குகளை முடக்கி கொழும்பு பிரதான நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த வங்கிக்கணக்குகளில் 790 மில்லியன் தொகை காணப்பட்டதாகவும், இந்த நிறுவனத்திற்கு சொந்தமான 95 கணக்குகளை முடக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் (CBSL) நிதிப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளரிடமிருந்து பெறப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இந்த நிறுவனம் மீதான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சிபிஎஸ்எல் அதிகாரிகள் தங்கள் முறைப்பாட்டில், ONMAX DT என்பது உறுதிசெய்யப்பட்ட பிரமிட் திட்டம் என்றும், இதில் சம்பத் சந்தருவன், அதுல இந்திக சம்பத், கயாஷான் அபேரத்ன, மதுரங்க பிரசன்ன, சாரங்க ரந்திக மற்றும் தனஞ்சய கயன் ஆகிய 6 பேர் வைப்புத் தொகையாக 790 மில்லியனை வைத்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
நிறுவனத்தால் ஏமாற்றப்பட்ட மொத்தத் தொகை இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்றாலும், இடைநிறுத்தப்பட்ட கணக்குகளில் கிடைத்த பணத்தை விட குறைந்தது இருபது மடங்கு அதிகமாக இருக்கும் என்று விசாரணை அதிகாரிகள் நம்புகின்றனர்.
எவ்வாறாயினும், பிரமிட் திட்டத்திற்கு எதிராக இதுவரை பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகள் எதுவும் வரவில்லை, இந்தத் திட்டத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் யாரேனும் இருப்பின் தானக முன்வந்து முறைப்பாடு செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.