முழு அளவிலான உள்நாட்டு போரை எதிர்கொள்ளும் சூடான் – ஐ.நா எச்சரிக்கை!
உள்நாட்டு கலவரங்களால் பாதிக்கப்பட்டுள்ள சூடான் தற்போது முழு அளவிலான போரை எதிர்கொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
குடியிருப்பு பகுதியில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில், ஐ.நா மேற்படி குறிப்பிட்டுள்ளது.
சூடானின் இராணுவ படையினருக்கும், துணை இராணுவ படையினருக்கும் இடையில் நடத்து வருகின்ற மோதலானது மூன்று மாதங்களை கடந்துள்ளது. இருப்பினும் சீற்றம் தீர்ந்தபாடில்லை.
இந்த மோதல் காரணமாக 3000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தப்பிப்பிழைத்தவர்கள் பாலியல் துஷ்பிரயோகங்கள் குறித்து பல முறைப்பாடுகளை அளித்துள்ளனர்.
மேலும் டார்ஃபுர் பகுதியில் மனித குலத்திற்கு எதிரான சாத்தியமான குற்றங்கள் குறித்து ஐ.நா எச்சரித்துள்ளது.
சூடானில் இவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெறுவது முழு அளவிலான போருக்கு வித்திட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.