கிழக்கு ஆளுநரின் அதிரடி நடவடிக்கை ;24 மணித்தியாலங்களுக்குள் ஆசிரியர் டிப்ளோமாதாரிகளுக்கு நியமனம்
கிழக்கு மாகாணத்தில் ஆங்கில உயர்கல்வி ஆசிரியர் பயிற்சியை நிறைவுசெய்துள்ள 48 டிப்ளோமாதாரிகளுக்கு நியமனம் வழங்கப்படாதிருந்தமை குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டு 24 மணித்தியாலங்களுக்குள் அவர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் தேசிய உயர்கல்வி ஆங்கில டிப்ளோமா கற்கைநெறியை நிறைவு செய்துள்ள 48 ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு, இன்று(08)கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.
2017ம் ஆண்டு ஆசிரியர் பயிற்சியை நிறைவுசெய்து நியமனங்களை பெற்றுக்கொள்ள காத்திருந்த ஆங்கில டிப்ளோமாதாரிகள் கிழக்கு மாகாணத்தின் உரிய அதிகாரிகளிடம் தமது நியமனம் தொடர்பிலான கோரிக்கைகளை முன்வைத்திருந்த போதிலும் அவர்களுக்கு நியமனத்தை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கவில்லை.இந்நிலையில் இந்த விடயம் தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநரின் கவனத்துக்கு நேற்று கொண்டுவரப்பட்டது. ஆளுநரின் அதிரடி உத்தரவின் பேரில் அவர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
நியமனத்தை பெற்றுக்கொண்ட ஆசிரியர்கள் 6 வருடங்களுக்கு மேல் ஒவ்வொரு நாளும் இந்த நியமனத்திற்காக காத்திருந்ததாகவும், இந்த நியமனம் எமக்கு பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தனர். இதன் போது ஆசிரியர்கள் கருத்து வெளியிடுகையில், “எமக்கு பின்னர் ஆசிரியை பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு கூட நியமனம் வழங்கப்பட்டிருந்த நிலையில், எமது நியமனம் குறித்து நாம் கடந்த கால ஆளுநர்கள், அரசியல்வாதிகள் உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து வழக்கு வெற்றிபெற்றும் எமக்கு நியமனம் வழங்கப்படுவில்லை, தொடர்ந்து இழுத்தடிப்புகள் இடம்பெற்று வந்தது.
ஆளுநர் செந்தில் தொண்டமானின் கவனத்துக்கு இந்த விடயம் கொண்டுவரப்பட்டு 24 மணித்தியாலங்களுக்குள் எமக்கு அவர் நியமனங்களை வழங்கியுள்ளார். பொருளாதார நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த எமது குடும்பம் இந்த நியமனத்தின் மூலம் இனி ஓரளவு மூச்சுவிடும் எனவும், இந்த நியமனம் எமது வாழ்க்கைக்கு அர்த்தம் பெற்று தந்துள்ளது. எமக்காக கடவுளை வணங்கும் போது இனிமேல் ஆளுநருக்காகவும் சேர்த்து வழிபடுவேன் என தெரிவித்தார்.”
இந்நிகழ்வில் பிரதம செயலாளர் ரத்நாயக்க,ஆளுநர் செயலாளர் மதநாயக்க,பிரத்தியேக செயலாளர் அணில் விஜயஶ்ரீ, கல்வி அமைச்சின் செயலாளர் திஸாநாயக்க,மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு செயலாளர் கோபாலரட்ணம், சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி முரளிதரன் உட்பட அரச அதிகாரிகள் மற்றும் திணைக்கள உத்தியோகஸ்தர்கள் கலந்துக் கொண்டனர்.