போதை பொருள் விவகாரம்; முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டு
அமெரிக்காவின் ஜனாதிபதி வசிக்கும் வெள்ளை மாளிகை, உச்சகட்ட பாதுகாப்பைக் கொண்டுள்ள கட்டிடமாகும். அங்கு பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வரும் அதிகாரிகள் சில தினங்களுக்கு முன் வெள்ளை மாளிகை வளாகத்தின் மேற்கு பகுதியில் பவுடர் போன்ற பொருளை கண்டுபிடித்தனர்.
மர்ம பொருள், பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. இதில் அது கோகெய்ன் போதை பொருள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. பலத்த பாதுகாப்பு உள்ள வெள்ளை மாளிகைக்குள் போதை பொருள் எப்படி நுழைந்தது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில் வெள்ளை மாளிகையில் போதை பொருள் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இது குறித்து முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “வெள்ளை மாளிகையில் கண்டெடுக்கப்பட்ட கோகெய்ன் போதை பொருள் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் அவர் மகன் ஹண்டர் ஆகியோரின் பயன்பாட்டிற்குத்தான்” என குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து டிரம்ப், தனது “ட்ரூத் சோஷியல்” சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “வெள்ளை மாளிகையில் உள்ள அமெரிக்க ஜனாதிபதியின் பிரத்யேக அலுவலகமான ஓவல் அலுவலகம் அருகே கிடைத்த இந்த கோகெய்ன் போதை பொருள், பைடன் மற்றும் அவர் மகன் ஹண்டருக்கானது தான். ஆனால், ஊடகங்கள் இதனை மறைக்க முயற்சிக்கும்.அதன்படி ஊடகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது மிக குறைந்த அளவு என்றோ அல்லது ‘அது கோகெய்ன் அல்ல’ என்றோ கூறத் தொடங்கி விடும்” என்று பதிவிட்டு உள்ளார்.
கோகெய்ன் போதை பொருள் கண்டுபிடிக்கப்பட்ட போது பைடன் வார இறுதி விடுமுறைக்காக கேம்ப் டேவிட் எனும் அமெரிக்க ஜனாதிபதிக்கான தங்குமிடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பத்திரிக்கையாளர் சந்திப்பில் இது குறித்து பேசிய வெள்ளை மாளிகையின் செய்தித்தொடர்பாளர் கெரீன் ஜீன்-பியர்,”கோகெய்ன் போதை பொருள் கண்டெடுக்கப்பட்ட பகுதி வெள்ளை மாளிகையில் பார்வையாளர்கள் பெரும் அளவில் வரும் பகுதி ஆகும்.மேலும் கோகெய்ன் போதை பொருள் சிறிய அளவிலேயே கண்டெடுக்கப்பட்டு உள்ளது.இது குறித்து விரைவாக விசாரணை நடத்த பைடன் உத்தரவிட்டு உள்ளார்”என்று கூறினார்.