ஆயுர்வேத திருத்த மசோதாவிற்கு எதிராக மனுத்தாக்கல்!
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட “ஆயுர்வேத திருத்த மசோதா” அரசியலமைப்புக்கு முரணானது எனக் கூறி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை பாராம்பரிய ஆயுர்வே மருத்துவர் ரத்னபால தாக்கல் செய்துள்ளதுடன், பிரதிவாதியாக சட்டமா அதிபர் பெயரிடப்பட்டுள்ளார்.
குறித்த மனுவில், ஆயுர்வேத திருத்த மசோதாவை நிறைவேற்ற வேண்டுமாக இருந்தால், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளை பெற வேண்டும் என்றும், ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
சட்டத்தரணி அருண லக்சிறி உனவதுன ஊடாக சமர்ப்பித்த இந்த மனுவில், ஆயுர்வேத சட்டத்தில் புதிய திருத்தங்களைச் சேர்ப்பதற்கான திருத்தப்பட்ட சட்டமூலத்தை அரசாங்கம் கடந்த 5ஆம் திகதி பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் பிரகாரம், ஆயுர்வேதம் மாகாண சபையுடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் முன்னர் அரசாங்கம் மாகாண சபைகளுடன் கலந்தாலோசிக்கவில்லை.
அதன்படி, சம்பந்தப்பட்ட மசோதாவில் உள்ள பல சரத்துக்கள் அரசியல் சாசனத்துக்கு எதிரானவை என்று மனுதாரர் கூறியுள்ளார்.