தென்மேற்கு சீனாவில் பெய்து வரும் கனமழை ;15 பேர் பலி
தென்மேற்கு சீனாவின் சோங்கிங் மாகாணத்தில் கடந்த தேதி முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் 19 மாவட்டங்களில் உள்ள 130,000க்கும் அதிகமான மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழையினால் மக்கள் வீட்டிற்குள்ளே முடங்கி கிடக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
முக்கியமாக யாங்சே ஆற்றங்கரையோரப் பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் 7,500 ஹெக்டேர் பயிர்கள் சேதமடைந்துள்ளது. அங்கு பேரிடர் மீட்பு குழு தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று (05) காலை 7 மணி நிலவரப்படி கனமழையினால் 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 4 பேரினை காணவில்லை எனவும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறிப்பாக வான்சூ மாவட்டத்தில் அதி கனமழை பெய்து வருவதால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த மகாணத்தின் அவசரகால அலுவலகம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கிட 29,000க்கும் அதிகமான பேரிடர் நிவாரணப் பொருட்களை அனுப்பி உள்ளது. இதில் போர்வைகள் மற்றும் மடிப்பு படுக்கைகள் உள்ளன.