நுவரெலியாவில் கண் சத்திர சிகிச்சை ஒவ்வாமை குறித்து ரம்புக்வெல கருத்து!
நுவரெலியா வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சை மேற்கொண்டு ஒவ்வாமை ஏற்பட்டவர்களில் 11 பேர் குணமடைந்துள்ளதுடன், இருவர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ”இந்திய நிறுவனமொன்றிடமிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருந்தில் காணப்பட்ட பற்றீரியா காரணமாகவே சத்திர சிகிச்சை மேற்கொண்டவர்கள் அசௌகரியத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
எனினும் தற்போது அந்த நிறுவனத்திடமிருந்து மருந்துகள் முற்றாக பாவனையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளது.
பேராதனை சிறுவர் வைத்தியசாலையில் இரு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் எனக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் அவர்களுக்கு மயக்க மருந்து வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய குறித்த மயக்க மருந்து எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சிறுவர்களுக்கு பயன்படுத்தப்பட மாட்டாது என்றும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்த முதலாவது அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது
எனினும் அதிலுள்ள தகவல்களை இப்போது ஊடகங்களுக்கு வெளியிட முடியாது. இறுதி அறிக்கை கிடைக்கப் பெற்றதன் பின்னர் முழுமையான தகவல்கள் வழங்கப்படும்” எனக் கூறினார்.