சீன நிறுவனம் ஒன்று ஊழியர்களுக்கு விடுத்துள்ள கடும் எச்சரிக்கை
திருமணத்திற்கு மீறிய உறவு வைத்து கொள்ளும் ஊழியர்கள் வேலையை விட்டு வெளியேற்ற படுவார்கள் என சீன நிறுவனம் ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொதுவாக தொழில் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு பல்வேறு விதிகளை வகுக்கும், இந்த விதிகளில் நேரம் தவறாமை, விடுமுறைகளை முடிந்தவரை எடுக்காமல் இருப்பது, மற்றும் சரியான நேரத்தில் வேலையை முடிப்பது போன்றவை அடங்கும்.
ஆனால் சீனாவின் ஜேஜியாங் மாகாணத்தை தளமாக கொண்ட தொழில் நிறுவனம் ஒன்று கடந்த ஜூன் 9ம் திகதி வித்தியாசமான விதிமுறை ஒன்றை விதித்துள்ளது.
அந்த விதிமுறை என்னவென்றால் தங்களுடைய நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்கள் யாரும் திருமணத்திற்கு புறம்பான உறவினை வைத்துக் கொள்ள கூடாது, அவ்வாறு வைத்து கொண்டால் பணியில் இருந்து நீக்கப்படுவீர்கள் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விதிமுறை குறித்து சீன நிறுவனம் தெரிவித்துள்ள விளக்கத்தில், திருமணம் மற்றும் குடும்ப உறவின் முக்கியத்துவத்தை ஊழியர்கள் உணரும் சூழலை ஏற்படுத்துவதற்காக இப்படியொரு விதி கொண்டு வரப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.
மேலும் இதன்படி ஒரு நல்ல ஊழியர் என்பதற்கு 4 ஒழுக்க விதிகளை இந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. அவை என்னவென்றால், சட்டவிரோத உறவுகளை தவிர்ப்பது, திருமணத்திற்கு புறம்பான உறவுவை தவிர்ப்பது, தங்கள் ஜோடியை பாதுகாக்க தவறுவது மற்றும் விவாகரத்தை குறைத்தல் போன்றவையாகும்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் அளித்த பதிலில், இந்த கட்டுப்பாடுகள் நிறுவனத்தின் செயல்திறனை அதிகரிக்க உதவுகிறது எனத் தெரிவித்துள்ளார்.
ஆனால் சீனாவின் தொழிலாளர் ஒப்பந்த சட்டத்தின் படி, இந்த விதிமுறை சட்டத்திற்கு புறம்பானது என்றும், ஊழியர்கள் சரியாக வேலை செய்யாவிட்டால் மட்டுமே பணி நீக்கம் செய்ய முடியும் என ஷாங்காயில் உள்ள V&T சட்ட நிறுவனத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சென் டோங் தெரிவித்துள்ளார்.