காலிமுகத்திடலில் தங்கியுள்ள யாசகர்களின் பரிதாபமான நிலை
கொழும்பு காலிமுகத்திடலில் தங்கியுள்ள யாசகர்களை அழைத்துச் சென்று ஹம்பாந்தோட்டை – ரிதியகமவில் அமைந்துள்ள சமூக சேவைகள் புனர்வாழ்வு நிலையத்தில் தங்கவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.
காலிமுகத்திடலில் யாசகர்களால் ஏற்படும் அசௌகரியங்களை தடுக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதற்காக துறைமுக அதிகாரசபை மற்றும் பொலிஸார் இணைந்து வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
காலி முகத்திடலில் யாசகம் பெறும் சுமார் 150 பேர் கொண்ட யாசகர்கள் குழுவினால் மக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
குறித்த யாசகர்கள் ரிதியகம மையத்தில் தங்கியிருக்கும் போது அவர்களுக்கு தேவையான தங்குமிட வசதிகள், உணவு மற்றும் பானங்களை வழங்குவதற்கான நிதியுதவியை இலங்கை துறைமுகங்கள் அதிகாரசபை மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களன் ஊடாக வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு துறைசார் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பணிப்புரை விடுத்துள்ளார்.