அமைச்சர் மனுஷ நாணயக்காரவால் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
இலாபகரமான வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொடுக்கும் மோசடியாளர்களிடம் ஏமாற வேண்டாம் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார வலியுறுத்தியுள்ளார்.
வெளிநாட்டு வேலை தேடுபவர்கள் இவ்வாறான மோசடி செய்பவர்களுக்கு பணத்தை வழங்க வேண்டாம் என தெரிவித்த அமைச்சர், இவ்வாறான செயற்பாடுகளுக்கு தாம் பொறுப்பேற்கப் போவதில்லை எனவும் தெரிவித்தார்.
தமக்கு இவ்வாறான கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில்லை எனவும், வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனங்களை நடத்தும் தொழிலில் தமது குடும்பத்தைச் சேர்ந்த எவரும் அல்லது அமைச்சுப் பணியிலுள்ள எந்தவொரு அதிகாரியும் ஈடுபடவில்லை எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
வெளிநாட்டு வேலை தேடுவோருக்கு வெளிநாடுகளில் இலாபகரமான தொழில்வாய்ப்புகளை வழங்குவதாக உறுதியளித்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக பணம் சேகரிக்கும் மோசடிகள் இயங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இதுபோன்ற மோசடிகளைத் தடுக்க கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க தீவிரமாகத் தலையிட்டு வருவதாகக் கூறிய அவர், எந்தவொரு நிதி பரிவர்த்தனைகளிலும் ஈடுபடும் முன், தங்கள் வேலைக்கான ஆதாரத்தை சரிபார்க்க அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களை வலியுறுத்தினார்.