நிபந்தனைகளை மீறி சுவிஸ் ஆயுதங்களை உக்ரைனுக்கு விற்ற ஜேர்மன்
ரஷ்ய உக்ரைன் போரில் நடுநிலைமையைப் பின்பற்றுவதில் சுவிட்சர்லாந்து உறுதியாக உள்ளது. ஆகவே, சுவிட்சர்லாந்திடமிருந்து ஆயுதங்கள் மற்றும் போர் வாகனங்களை வாங்கும் நாடுகள், அவற்றை உக்ரைனுக்கு மறு ஏற்றுமதி செய்ய தொடர்ந்து அனுமதியளிக்க மறுத்துவருகிறது அந்நாடு.
ஆனால், உக்ரைனில், சுவிஸ் நிறுவனமான Mowag நிறுவனத்தின் தயாரிப்பான கவச வாகனங்கள் பயன்படுத்தப்படும் காட்சிகள் வெளியாகின. அதைத் தொடர்ந்து, சுவிஸ் பொருளாதார அமைச்சகம் விசாரணை ஒன்றைத் துவக்கியது.
விசாரணையில், ஜேர்மன் நிறுவனம் ஒன்று சுவிஸ் கவச வாகனங்களை உக்ரைனுக்கு மறு ஏற்றுமதி செய்துள்ளது தெரியவந்துள்ளது.
அதாவது, 1990களில், 36 சுவிஸ் கவச வாகனங்கள் டென்மார்க் நாட்டுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன. பின்னர், 2013ஆம் ஆண்டு, சுவிஸ் அதிகாரிகள் அனுமதியுடன் அவற்றில் 27 கவச வாகனங்கள் ஜேர்மன் நிறுவனம் ஒன்றிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.
2018ஆம் ஆண்டு, அந்த குறிப்பிட்ட நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர், அந்த கவச வாகனங்களை தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டுள்ளார்.
அவர் அந்த கவச வாகனங்களின் வெளிக்கவசத்தை அகற்றியபின், அந்த வாகனங்களை உக்ரைனுக்கு மறு ஏற்றுமதி செய்ய ஜேர்மன் பாதுகாப்புத்துறை அனுமதித்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
வாகனங்களில் மாற்றம் செய்தாலும், அது நிபந்தனைகளை மீறும் செயலே என சுவிட்சர்லாந்து முடிவு செய்துள்ளது.ஆகவே, நிபந்தனைகளை மீறி அந்த ஜேர்மன் நிர்வாக இயக்குநர் சுவிஸ் வாகனங்களை உக்ரைனுக்கு மறு ஏற்றுமதி செய்துள்ளதையடுத்து, சுவிஸ் வாகனங்களை விற்பனை செய்ய அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுவிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.