ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த அல்லிராஜா சுபாஸ்கரன்: கலந்துரையாடப்பட்ட முக்கிய விடயங்கள்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை லைக்கா (Lyca) குழுமத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன் மற்றும் அந்நிறுவனத்தின் பிரதித் தலைவர் பிரேம் சிவசாமி ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
பிரித்தானியாவிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நேற்று முன்தினம் (19) சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இச் சந்திப்பு தொடர்பில் பத்திரிகையொன்று செய்தி வௌியிட்டுள்ளது.
இந்த சந்திப்பின் போது, அரசியல் கைதிகள் அனைவரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் அல்லிராஜா சுபாஸ்கரன் வலியுறுத்தியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
அதன் மூலமே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என தெரிவித்ததாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்போது ஜனாதிபதி அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் சாதகமான நிலை ஏற்படுமெனவும் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் வடக்கு, கிழக்கிலும் இலங்கையிலும் முதலீடுகளை மேற்கொள்வதற்கு முன்வர வேண்டும் எனவும் ஜனாதிபதி கோரியுள்ளார்.
முதலீடுகளுக்கான சகல வசதிகளையும் செய்து கொடுப்பதற்கு அரசாங்கம் தயாராகவுள்ளதாகவும் விரைவில் அதற்கான சட்டத் திருத்தங்களைக் கொண்டுவரவுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியதாக குறித்த பத்திரிகை செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.