இதயம் ஏன் ஓய்வில்லாமல் இயங்குகிறது? பலரும் அறியாத அறிவியல் உண்மைகள்
நமது உடல் உறுப்புகளில் பெரும்பாலானவற்றுக்கு அவ்வப்போது ஓய்வு கிடைக்கும். அதாவது, உணவு சாப்பிடவில்லை என்றால், ஜீரண உறுப்புகளுக்கு வேலை இல்லை. தூங்கினால், மூளைக்கு வேலை இல்லை. இப்படி, கை, கால், கண் போன்ற உறுப்புகள் கூட ஓய்வு எடுக்க முடியும்.
ஆனால், ஓய்வே இல்லாமல் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு சில உறுப்புகளில் மிக முக்கியமானது இதயம்தான். ஏன், இதயம் மட்டும் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கிறது?
இதயம் ‘துடிக்கவில்லை” என்றால், அசுத்த ரத்தம் தூய்மையாகாது. உடல் திசுக்களுக்கு, சக்தி தரும் குளுக்கோஸ் போன்ற சத்துக்கள், தாது உப்புகள் போன்றவை ஒழுங்காகப் போய் சேராது.
போதுமான சத்து கிடைக்காமல் திசுக்கள் பாதிக்கப்படும். செயல் இழந்து போகும். மீண்டும் புதுப்பித்துக் கொள்ள முடியாமல் போகும். கடைசியில், ஒட்டுமொத்த மனித உடலே இறந்துபோகும். இந்த நிலை ஏற்படக்கூடாது என்பதற்காகத்தான், இதயம் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. இதயத்துக்குத் துணையாக நுரையீரலும் தொடர்ந்து இயங்குகிறது.