ஜேர்மனியில் கிடைத்த 2ம் உலகப்போர்க்கால வெடிகுண்டு; 8,100 பேர் வீடுகளை விட்டு வெளியேற்றம்
ஜேர்மனியில் இரண்டாம் உலகப்போர்க்கால குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சுமார் 8,100 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை, ஜேர்மனியின் ஹானோவர் நகரில் இரண்டாம் உலகப்போர்க்கால பிரித்தானிய வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.அதை பாதுகாப்பாக செயலிழக்கச் செய்வதற்காக ஹானோவர் நகரில் வாழ்ந்த சுமார் 8,100 பேர், தங்களுக்குத் தேவையான மருந்துகள், குழந்தைகளுக்கான உணவு போன்ற அத்தியாவசியப் பொருட்களை எடுத்துக்கொண்டு தங்கள் வீடுகளைவிட்டு வெளியேற அறிவுறுத்தப்பட்டார்கள்.
அந்த வெடிகுண்டு பாதுகாப்பான முறையில் செயலிழக்கச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஹானோவர் தீயணைப்புத் துறையினர் அது தொடர்பான புகைப்படம் ஒன்றை வெளியிட்டார்கள்.இதுபோல் உலகப்போர்க்கால குண்டுகள் ஜேர்மனியில் கண்டெடுக்கப்படுவது இது முதல் முறையல்ல. அவற்றை பொதுவாக எந்த சிக்கலுமின்றி செயலிழக்கச் செய்வதும் வழக்கம்.
ஆனால், இந்த குறிப்பிட்ட, வானிலிருந்து வீசப்பட்ட குண்டு 500 கிலோகிராம் எடையுள்ளதாக இருந்ததுடன், அதனுடனேயே வெடிகுண்டை வெடிக்கச் செய்யும் ஃபியூஸும் இருந்ததால், அதை செயலிழக்கச் செய்வது சற்று சிக்கலான விடயமாக இருந்ததாக தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர்.
மாலை 6.00 மணியளவில் அந்த வெடிகுண்டு செயலிழக்கச் செய்யப்பட்டதும், தங்கள் வீடுகளுக்குத் திரும்பலாம் என தீயணைப்புத் துறையினர் தெரிவித்ததைத் தொடர்ந்து, மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பினர்.