“‘என் பிள்ளை அருகில் இருக்க வேண்டும்’ – நிறைவேறாத இறுதி ஆசை: தமிழர் தாயகத்தில் தொடரும் சோகம்!
கடந்த 31 ஆண்டுகள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதியாக சிறை வைக்கப்பட்டிருக்கும் தோப்பூர்-மூதுரைச் சேர்ந்த, கதிர்காமத்தம்பி சிவகுமார் என்பவரின் ஒரே உறவான சுப்பிரமணியம் கமலாதேவி ((வயது-79) , புற்றுநோயினால் உயிரிழந்துள்ளார்.
தாய்-தந்தை, குடும்பம்-உறவு என எவருமற்ற தனது தம்பியை தான் வாழும் காலத்திலேயே சிறை மீட்டுவிட வேண்டும் என்று அயராது பாடுபட்டு வந்த அவரின் மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சகோதரனின் விடுதலைக்காக அல்லும் பகலும் அரசதிகாரத்திடம் மன்றாடி மனமுடைந்து, புற்றுநோயின் பாதிப்பிற்கு ஆளாகி நீண்ட நாட்களாக படுக்கை நோயாளியாக இருந்து அவர் மரணடைந்துள்ளார் என மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு இவ்வாறான சோகம் தொடர்கின்றது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.





