வரவிருக்கும் தேர்தல் திராவிடத்துக்கும், பாசிச சக்திகளுக்கும் இடையே நடக்கும் போர்
மாநிலங்களை அழிக்கத் துடிக்கும் பாஜக, அனைத்து மாநிலங்களிலும் பொம்மை அரசுகளை அமைக்க விரும்புகிறது என தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
என்டிடிவி நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
தமிழகத்தைக் கைப்பற்ற எடுக்கும் பாஜகவின் எந்த முயற்சியும் பலனளிக்கப் போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
வரவிருக்கும் தேர்தல் திராவிடத்துக்கும், பாசிச சக்திகளுக்கும் இடையிலான நடக்கும் போராக இருக்கப்போகிறது என தெரிவித்த உதயநிதி ஸ்டாலின் திராவிட கருத்தியல் என்பது அனைவராலும் கடைப்பிடிக்கப்பட்டால், அது இந்தியாவை இன்னும் வலிமையாக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என கூறினார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
‘நான் திராவிட இனத்தைச் சேர்ந்தவன். என்னை திராவிடன் என்று அழைத்துக் கொள்வதில் பெருமைப்படுகிறேன்.
எங்களிடம் இந்த உலகத்துக்கு வழங்க திட்டவட்டமான, தெளிவான மற்றவைகளிடமிருந்து வேறுபட்ட சில திடமான, தனித்துவமான கொள்கைகள் உள்ளன என நம்புகிறேன்’ என்ற அண்ணாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க வரிகளை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.
இவை வெறும் வார்த்தைகளோ, முழக்கமோ அல்ல. இது சுயமரியாதைக்கான பிரகடனம், சமூக நீதி மற்றும் மாநில உரிமைகளுக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பின் வெளிப்பாடு.
ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியைச் சேர்ந்த மக்களின் விருப்பத்தின் விளைவாக பிறந்த ஒரு கருத்தியல், முழு தேசத்தையும் எவ்வாறு வலுப்படுத்த முடியும் என்று உங்களில் பலர் என்னிடம் கேட்கலாம். இந்த கேள்வி என்னை ஆச்சரியபடுத்தவில்லை.
திராவிட கருத்தியல் என்பது, பிரிவினையை தூண்டுவதல்ல. உண்மையில், அது பிரிவினைக்கு எதிரானது. திராவிடம் அனைவரையும் உள்ளடக்கியது. இது ஆதிக்கத்தால் விளையும் ஒருங்கிணைப்பை அல்ல, சமத்துவத்தின் மூலமான ஒற்றுமையையே வலியுறுத்துகிறது என்பதை தெளிவாகப் பதிவு செய்ய விருப்பப்படுகிறேன்” என்றார்.





