தெலுங்கானா அரசின் அலட்சியப் போக்கு – 20 குழந்தைகள் வைத்தியசாலையில்!
தெலுங்கானா மாநிலத்தில் பாடசாலையில் வழங்கப்பட்ட மதிய உணவை உட்கொண்ட 20 மாணவர்கள் சுகவீனம் அடைந்துள்ளனர். குறித்த சம்பவம் கடந்த வியாழக்கிழமை பதிவாகியுள்ளது.
வயிற்று வலி, வாந்தி மற்றும் குமட்டல் போன்ற உடல்நலப் பிரச்சினைகளை மாணவர்கள் எதிர்கொண்டதை தொடர்ந்து உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சங்கரெட்டி (Sangareddy) மாவட்டம், வெங்கடாபூர் (Venkatapur) கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளியிலேயே இந்த துயர சம்பவம் பதிவாகியுள்ளது.
உள்ளுர் விழாவொன்றில் சமைக்கப்பட்ட உணவை சூடாக்கி மாணவர்களுக்கு வழங்கியதன் காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குறைந்தது 42 குழந்தைகள் அந்த உணவை சாப்பிட்டதாகவும், அவர்களில் 20 பேர் உடல்நலக் கோளாறுகளை எதிர்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இது அரசாங்கத்தின் லட்சிய இலவச மதிய உணவு திட்டத்தில் உள்ள மாசுப்பாட்டை குறிப்பதாக விமர்சிக்கப்பட்டுள்ளது.





