கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிராக மாபெரும் போராட்டம் -ஆயிரக்கணக்கானோர் அணிதிரளவேண்டும் என ரவிகரன் எம்.பி அழைப்பு
மகாவலி அதிகாரசபையின் எல் வலயத்தால் முன்னெடுக்கப்படும் தமிழர்களின் இனப்பரம்பல் கோலத்தை மாற்றியமைக்கும் ‘கிவுல் ஓயா’ திட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு எதிர்வரும் 02ஆம் திகதி ஆயிரக்கணக்கில் மக்கள் தன்னெழுச்சியாக அணி திரளவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அழைப்பு விடுத்துள்ளார்.
கிவுல் ஓயாத் திட்டத்திற்கு எதிராக எதிர்வரும் பெப்ரவரி மாதம் 02ஆம் திகதி இடம்பெறவுள்ள போராட்டம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது,
“தமிழர்களுடைய பூர்வீக நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதற்கு எதிராகவே நாங்கள் போராடுகின்றோம்.
இந்த உரிமைசார் போராட்டத்தில் பெருந்திரளான தமிழ்மக்கள் எழுச்சியுடன் பங்கேற்கவேண்டும்.
வவுனியா வடக்குப் பிரதேசத்திலேயே இத்தகைய கிவுல் ஓயா திட்டத்திற்கான பாரிய நில அபகரிப்பு இடம்பெறுவதால் வவுனியா வடக்கு பிரதேசத்திலுள்ள அனைத்து தமிழ் மக்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்கவேண்டுமென இச்சந்தர்ப்பத்தில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்ளவிரும்புகின்றேன்.
நாம் தமிழ், முஸ்லிம், சிங்களம் என நாம் இங்கு இனவாதத்தையோ பிரிவினைகளையோ ஏற்படுத்த முயலவில்லை. எமது தமிழ் மக்களுக்குரிய பூர்வீக நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதற்கெதிராகவே நாம் போராடுகின்றோம்.
இவ்வாறு எமது தமிழ் மக்களின் காணிகள் ஆக்கிரமிக்கப்படுவதை ஒருபோதும் எம்மால் அனுமதிக்கமுடியாது. எனவே எமது பூர்வீக நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு இனப்பரம்பல் கோலங்களை மாற்றியமைக்கும் இவ்வாறான திட்டங்களை எதிர்த்து மன உறுதியோடு நாம் அனைவரும் போராட வேண்டும்.
வவுனியா வடக்கு பிரதேசம் தமிழர்களிடமிருந்து பறிபோகாமல் இருக்கவேண்டுமெனில் இந்தப் போராட்டத்தில் வவுனியா வடக்கிலுள்ள தமிழ் மக்கள் மிக அதிகமாக கலந்துகொள்ளவேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன்.
வவுனியா வடக்குப் பிரதேசசபை என்பது இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் ஆட்சியில் இருக்கின்ற ஒரு பிரதேசசபையாகும்.
எனவே வவுனியா வடக்குப் பிரதேசசபையின் தவிசாளர் மற்றும் தமிழ்த்தேசியத்தோடு பயணிக்கின்ற ஒவ்வாரு பிரதேசசபை உறுப்பினர்களும் இந்த போராட்டத்தை வலுப்படுத்துவதற்கு பாரிய பங்களிப்புக்களைச் செய்யவேண்டிய பாரிய பொறுப்பிருக்கின்றது.
எமது பூர்வீக நிலத்தைப் பாதுகாப்பதற்காக நாம் ஜனநாயகவழியில் போராடுவதற்கு எவராலும் எவ்வித தடைகளையும் ஏற்படுத்த முடியாது. எனவே இந்தப் போராட்டத்தை முழு வீச்சுடன் மேற்கொள்வதற்கு நாம் எம்மைத் தயார்ப்படுத்திக்கொள்ளவேண்டும்.
எமது பூர்வீகநிலம் அபகரிக்கப்படுவதை தடுப்பதற்கு போராட்டமே ஒரே வழியாகும். ஆகவே நாம் அனைவரும் ஒற்றுமையாகச் செயற்பட்டு இந்தப் போராட்டத்தை மேற்கொள்ளவேண்டும்.
குறித்த போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேலான மக்களை அணிதிரட்டிப் போராடுவதற்கு நாம் அனைவரும் உரிய தயார்ப்படுத்தல்களை மேற்கொள்ளவேண்டும். வவுனியா வடக்குப் பிரதேசத்தினைப் பாதுகாக்க நாம் அனைவரும் அணிதிரள்வோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.





