முத்தரப்பு பேச்சுவார்த்தைகளுக்கு இடையூறாக வந்த ஈரான் – கவலையில் ஜெலென்ஸ்கி!
அமெரிக்கா தற்போது ஈரான் மீது கவனம் செலுத்தி வருவதால், உக்ரைன், அமெரிக்கா, ரஷ்யா இடையேயான முத்தரப்பு பேச்சுவார்த்தைகள் ஒத்திவைக்கப்படலாம் என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி (Zelenskyy) இன்று கூறியுள்ளார்.
இந்த வார இறுதியில் உக்ரைன், அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுடன் தனது முத்தரப்பு பேச்சுவார்த்தைகளைத் தொடர திட்டமிட்டிருந்தது.
ஆனால் அமெரிக்கா ஈரான் மீது கவனம் செலுத்துவதால் இந்த பேச்சுவார்த்தைகள் ஒத்திவைக்கப்படலாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் ரொய்டர்ஸ் செய்திக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், “நாங்கள் ஒப்புக்கொண்ட அனைவரும் கூட்டத்தில் கலந்துகொள்வது எங்களுக்கு மிகவும் முக்கியம். ஏனென்றால் அனைவரின் கருத்துக்களையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஆனால் திகதி மற்றும் அல்லது இடம் மாறக்கூடும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை முந்தைய சுற்று பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்ட ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உயர்மட்ட தூதர்களான ஸ்டீவ் விட்காஃப் ( Steve Witkoff) மற்றும் ஜாரெட் குஷ்னர் (Jared Kushner) ஆகியோர் அடுத்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள மாட்டார்கள் என அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ (Marco Rubio) தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.





