பிரித்தானிய காவல் துறையில் பெரும் சீர்திருத்தங்களை அறிவித்த மஹ்மூத்! அதிகாரிகள் குறைய வாய்ப்பு!
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் காவல் துறையில் பெரும் சீர்திருத்தங்களை உள்துறை செயலாளர் ஷபானா மஹ்மூத் (Shabana Mahmood) நேற்று அறிவித்துள்ளார்.
இதில் AI மற்றும் நேரடி முக அங்கீகார தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை கணிசமாக அதிகரிக்க £140 மில்லியன் முதலீடு செய்யவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய சீர்த்திருத்தங்களில், CCTV பகுப்பாய்வு, டிஜிட்டல் தடயவியல் மற்றும் நிர்வாக கடமைகள் போன்ற பணிகளுக்கு AI ஐப் பயன்படுத்துவதன் மூலம், ஒவ்வொரு ஆண்டும் 6 மில்லியன் காவல் நேரங்கள் குறையும் என்றும் இது கணிசமாக 3000 அதிகாரிகள் பணியில் இருப்பதற்கு சமம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தேடப்படும் குற்றவாளிகளைப் பிடிக்க நாடு தழுவிய படைகளால் பயன்படுத்தப்படும் நேரடி முக அங்கீகார வேன்களின் எண்ணிக்கை 10 முதல் 50 வரை ஐந்து மடங்கு அதிகரிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தேசிய குற்றவியல் நிறுவனம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு காவல் போன்ற தற்போதைய தேசிய நிறுவனங்களை ஒரே தேசிய காவல் ஆணையரின் கீழ் இணைத்து, நிறுவவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காவல்துறைத் தலைவர்கள் சீர்திருத்தங்களை காலதாமதமான திருத்தங்கள் எனக் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன் சிலர் குறைந்து வரும் அதிகாரிகள் தொடர்பிலும் கவலை வெளியிட்டுள்ளனர்.





