மாங்குளம் ஆதார மருத்துவமனையில் புனரமைக்கப்பட்ட விடுதிகள் திறப்பு
மாங்குளம் ஆதார மருத்துவமனையில் புனரமைக்கப்பட்ட விடுதிகளைப் பாவனைக்குக் கையளிக்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு விடுதிகளைத் திறந்து வைத்தார்.
நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர், ஏனைய மாகாணங்களில் இருந்து வடக்கு மாகாணத்திற்குச் சேவைக்கு வரும் சுகாதாரத் துறை உத்தியோகத்தர்களுக்கு முறையான தங்குமிட வசதிகளை வழங்குவதன் மூலமே, மக்களுக்கான முழுமையான சேவையை உறுதிப்படுத்த முடியும் எனத் தெரிவித்தார்.

வடக்கு மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இப்புனரமைப்புப் பணிகளுக்கு இலங்கை இராணுவத்தின் பொறியியல் பிரிவினர் தமது மனிதவலுவை வழங்கியுள்ளனர்.
இதன் மூலம் சுமார் 6 மில்லியன் ரூபாய் வரையிலான அரச நிதி சேமிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் குறிப்பிட்டார்.

முதற்கட்டமாக 8 அறைகளைக் கொண்ட தாதியர் விடுதி, சாரதி விடுதி மற்றும் நோயாளர் காவு வண்டித் தரிப்பிடம் என்பன இன்று திறந்து வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் வன்னிப் பிராந்தியக் கட்டளைத் தளபதி, மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

மீதமுள்ள மருத்துவர் மற்றும் துணை மருத்துவ ஆளணியினர் விடுதிகளும் விரைவில் புனரமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





