வடக்கு கல்வியில் தொடரும் முறைகேடு , மௌனம், சந்தேகம் – போர்க்கொடி தூக்கிய ஆசிரியர் சங்கம்
கல்வி அமைச்சின் சுற்றுநிருபங்களுக்கு முரணாகவும், முறையான அனுமதிகள் இன்றியும் வட மாகாண பாடசாலைகளில் தொண்டைமானாறு வெளிக்கள நிலையத்தின் பரீட்சைகளை நடத்தும் பாடசாலை அதிபர்களுக்கு எதிராக விரிவான விசாரணைகளை முன்னெடுக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு எழுத்துமூல முறைப்பாடொன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சின் 2025.11.11 ஆம் திகதிய ED/09/12/02/02/05(I) இலக்க கடிதத்திற்கு முரணாக, அரச வளங்களையும் அரச கரும நேரத்தையும் தவறாகப் பயன்படுத்தி, அரச சார்பற்ற நிறுவனமான தொண்டைமானாறு வெளிக்கள நிலையத்திற்கு நிதியை வழங்கியமை குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலாப நோக்கோடு செயற்படும் அரச சார்பற்ற நிறுவனம் அரச சார்பற்ற நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டுள்ள தொண்டைமானாறு வெளிக்கள நிலையம், தனது ஆரம்பகால நோக்கங்களிலிருந்து விலகி, தற்போது பரீட்சைகள் மூலம் இலாபம் ஈட்டும் நோக்கில் செயற்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்நிறுவனத்தின் செயற்பாடுகளைப் பாடசாலைகளுக்குள் கட்டுப்படுத்துமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய, வட மாகாண கல்வி அமைச்சு மற்றும் கல்வித் திணைக்களம் என்பன இணக்கப்பாடு வெளியிட்டிருந்த போதிலும், அந்த இணக்கப்பாடுகள் மீறப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாகாண கல்விப் பணிப்பாளரின் உத்தரவு மீறல் வெள்ள அனர்த்தம் காரணமாகப் பாடசாலைகள் இயங்காததால், தரம் 12 (2027 ஆவது அணி) மாணவர்களுக்கான முதலாம் தவணைப் பரீட்சையைப் பாடசாலை மட்டத்தில் நடத்தி மதிப்பீடு செய்யுமாறு வட மாகாண கல்விப் பணிப்பாளர் கடந்த 2025.12.31 அன்று அறிவுறுத்தியிருந்தார்.
இருப்பினும், சில பாடசாலை அதிபர்கள் இந்த அறிவுறுத்தலை மீறி, தொண்டைமானாறு வெளிக்கள நிலையத்திடம் பணம் செலுத்தி வினாத்தாள்களைப் பெற்று, பாடசாலை நேரத்தில் அந்த நிலையத்தின் நேர அட்டவணைக்கு அமையப் பரீட்சைகளை நடத்தி வருவதாக ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இது சட்டவிரோதமான செயற்பாடு எனவும் அரச வளங்களைத் தவறாகப் பயன்படுத்துவதாகவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அதிகாரிகள் மீதான சந்தேகம் கடந்த 2024 ஆம் ஆண்டு யா/மானிப்பாய் மகளிர் கல்லூரியில் இவ்வாறான பரீட்சை நடைபெற்றபோது, ஆசிரியர் சங்கத்தின் முறைப்பாட்டையடுத்து வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளரால் அது நிறுத்தப்பட்டிருந்தது.
இருப்பினும், இன்றும் அதே முறைகேடுகள் தொடர்வதாகவும், இதனை வட மாகாண கல்வி அதிகாரிகள் கட்டுப்படுத்தாமல் இருப்பது அவர்கள் மீதான பாரிய அதிருப்தியையும், அதிகாரிகள் இந்த இலாப நோக்கம் கொண்ட நிறுவனத்தின் மூலம் நன்மையடைகிறார்களோ என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்துவதாகவும் அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, அனுமதியின்றி அரச வளங்களைப் பயன்படுத்தி, முறைகேடான விதத்தில் பரீட்சைகளை நடத்தும் அதிபர்கள் குறித்தும், அரச சார்பற்ற நிறுவனத்திற்கு நிதி வழங்கியமை குறித்தும் விரிவான விசாரணை நடத்துமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளரிடம் கேட்டுக்கொண்டுள்ளது.





