தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு ; 2026 ஜனவரி முதல் நடைமுறையில்
தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்கி, ஜனாதிபதியின் தலையீட்டுடன் அவர்களது சம்பளத்தை உயர்த்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததற்கமைய ஜனவரி மாதம் முதல் அந்தத் தொகை தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் என பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.
இதற்காக வரவு செலவுத் திட்டத்தில் 5000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இன்று (25) கொடக்கவெல பகுதியில் அமைந்துள்ள தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதியமைச்சர்,
கடந்த காலங்களில் ஆட்சி செய்த அரசாங்கங்களிடம் தோட்டத் தொழிலாளர்கள் சம்பள உயர்வு கோரி பல போராட்டங்களை முன்னெடுத்த போதிலும், அவற்றுக்கு எவ்வித சாதகமான முடிவுகளும் கிடைக்கவில்லை.
எனினும் தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வரும்போது தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்துவதாக வாக்குறுதி அளித்திருந்தது. அந்த வாக்குறுதி இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
தோட்டத் தொழிலாளர்களின் அனைத்து அடிப்படை வசதிகளையும் மேம்படுத்திக் கொடுக்க அரசாங்கம் என்ற ரீதியில் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என தெரிவித்தார்.





