எவ்வித பாதுகாப்பும் இன்றி 508 மீற்றர் உயர கோபுரத்தில் ஏறி அலெக்ஸ் ஹோனால்ட் சாதனை
உலகின் மிகச்சிறந்த ‘ப்ரீ சோலோ’ (Free Solo) மலையேற்ற வீரரான அலெக்ஸ் ஹோனால்ட் (Alex Honnold), தாய்வானின் தலைநகரில் அமைந்துள்ள 508 மீற்றர் உயரமான ‘தாய்ப்பே 101’ கோபுரத்தை எவ்வித கயிறுகளோ அல்லது பாதுகாப்பு உபகரணங்களோ இன்றி ஏறி உலகை வியக்க வைத்துள்ளார்.
நூற்றுக்கணக்கான மக்களின் உற்சாகக் குரல்களுக்கு மத்தியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தனது பயணத்தை ஆரம்பித்த அவர், கட்டிடத்தின் வெளிப்புற உலோகத் தூண்களை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு வெறும் கைகளால் உச்சியை அடைந்தார். மழை காரணமாக ஒரு நாள் தாமதமாகத் தொடங்கிய இந்த சாகசம், நெட்பிளிக்ஸ் (Netflix) தளத்தில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.
“காற்று பலமாக வீசியதால் சமநிலையைப் பேணுவது சவாலாக இருந்தது” எனத் தெரிவித்த ஹோனால்ட், தனது இந்தச் சாதனை மக்கள் தங்கள் வாழ்க்கையில் உள்ள சவால்களை எதிர்கொள்ள உந்துதலாக அமையும் என நம்பிக்கை வெளியிட்டார்.
இதற்கு முன்னர் 2004 ஆம் ஆண்டு பிரெஞ்சு வீரர் அலைன் ரொபர்ட் இக்கட்டிடத்தில் ஏறினாலும், கயிறுகள் இன்றி ஏறிய முதல் வீரர் ஹோனால்ட் என்பது குறிப்பிடத்தக்கது.





