டிட்வா பேரழிவு – Rebuilding Sri Lanka நிதியத்திற்கு 8.5 பில்லியன் நன்கொடை
டிட்வா புயலுக்கு பிறகு மீட்பு முயற்சிகளை ஆதரிப்பதற்காக அமைக்கப்பட்ட இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும் (Rebuilding Sri Lanka) நிதியத்திற்கு கிடைக்கப் பெற்ற நன்கொடைகள் 8.5 பில்லியன் ரூபாயைத் தாண்டியுள்ளதாக நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
இது உள்ளூர் வணிகங்கள் மற்றும் குடிமக்களிடமிருந்து வலுவான ஆதரவை பிரதிபலிக்கிறது.
வெளிநாட்டு நன்கொடைகளும் அதிகரித்துள்ளதாக தெரிவித்த நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும மொத்த தொகை 9.49 மில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளதாக கூறினார்.
இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும் நிதியத்தின் தற்போதைய நிலை குறித்த புதுப்பிப்பை வழங்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“நன்கொடை அளித்த நாடுகளில், அமெரிக்கா அதிகபட்சமாக 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை பங்களித்துள்ளது.
மேலும், அவுஸ்திரேலியா, சீனா, பிரித்தானியா, ஜெர்மன், கனடா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பூட்டான், இத்தாலி மற்றும் தென் கொரியா ஆகியவை நிதி உதவி வழங்கும் முதல் பத்து நாடுகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்த நாடுகளைத் தாண்டி, பேரழிவிற்குப் பிறகு மீட்புக்காக மொத்தம் 47 வெளிநாட்டு நாடுகள் இலங்கைக்கு உதவி வழங்கியுள்ளன” என்றும் அவர் கூறினார்.
இதனிடையே, இலங்கை சுங்கத்துறையும் அதிக அளவு பொருட்களை உதவியாகப் பெற்றுள்ளது என சூரியப்பெரும சுட்டிக்காட்டினார்.
உதவியாகப் பெறப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு ஏற்கனவே ரூ.2.3 பில்லியனைத் தாண்டிவிட்டதாக அவர் கூறினார்.





