“மாங்குளம் பேருந்து நிலையத்தை முழுமையாக இயக்குக”: அதிகாரிகளுக்கு வடக்கு ஆளுநர் உத்தரவு
முல்லைத்தீவு மாவட்டத்தின் முக்கிய மையப் புள்ளியாகத் திகழும் மாங்குளம் பேருந்து நிலையத்தை, முழுமையான பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கு ஏதுவான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.
மாங்குளம் பேருந்து நிலைய அபிவிருத்தி தொடர்பாக நகர அபிவிருத்தி அதிகார சபையால், தயாரிக்கப்பட்ட திட்டவரைவு பற்றி ஆராயும் விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (23.01.2026) மாலை நடைபெற்றது.
மாங்குளம் பேருந்து நிலையம் மற்றும் அதனைச் சூழவுள்ள வர்த்தக நிலையங்கள் என்பன உரிய வகையில் பயன்படுத்தப்படாத நிலையில் காணப்படுகின்றன.
இதனை மாற்றியமைத்து, அப்பகுதியை முழு அளவில் இயக்குவதற்கான திட்ட வரைபு நகர அபிவிருத்தி அதிகார சபையால் தயாரிக்கப்பட்டு, இக்கலந்துரையாடலில் சமர்ப்பிக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் பின்வரும் விடயங்கள் ஆராயப்பட்டன:
பேருந்து நிலையத்துக்கான போக்குவரத்துப் பாதைகள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கான இணைப்பு வீதிகள் அமைத்தல். மாங்குளத்தை மையப்படுத்தி, முல்லைத்தீவு மாவட்டத்தின் உள்ளூர் பேருந்து சேவைகளை எதிர்காலத்தில் வினைத்திறனாக ஒருங்கிணைத்து நடைமுறைப்படுத்துதல்.
பேருந்து நிலையத்துக்காகத் திட்டமிடப்படும் வீதி, மாங்குளம் ரயில் நிலையத்திற்குரிய காணி எல்லைக்குள் வருவதால், ரயில்வே திணைக்களத்தின் அனுமதியை விரைவாகப் பெற்றுப் பணிகளை ஆரம்பிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது.
இத்திட்ட முன்மொழிவை முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சமர்ப்பித்து அங்கீகாரத்தைப் பெறுமாறும் ஆளுநர் இதன்போது பணிப்புரை வழங்கினார்.
இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர், முல்லைத்தீவு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர், ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர், புதுக்குடியிருப்புப் பிரதேச சபைத் தவிசாளர், நகர அபிவிருத்தி அதிகார சபையின் வடக்கு மாகாணப் பணிப்பாளர் மற்றும் பிரதிப் பணிப்பாளர், ரயில்வே திணைக்களப் பொறியியலாளர், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்டப் பொறியியலாளர், வடக்கு மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களப் பணிப்பாளர், இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.





