கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது ஓமான் கடற்படைக் கப்பல் ‘அல் சீப்’
ஓமான் ரோயல் கடற்படைக்குச் சொந்தமான ‘அல் சீப்’ (AL SEEB) கப்பல், எரிபொருள் மற்றும் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் இன்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது.

கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்த இந்தக் கப்பலுக்கு, இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமையச் சிறப்பான வரவேற்பை அளித்தனர்.
75 மீட்டர் நீளம் கொண்ட இந்தக் கப்பலுக்கு லெப்டினன்ட் கமாண்டர் ஹமத் பின் முகமது அல்டர்மகி (Lieutenant Commander Hamad Bin Mohammed Aldarmaki) தலைமை தாங்குகிறார்.

இந்த விஜயமானது இலங்கை மற்றும் ஓமான் ஆகிய இரு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையிலான நல்லுறவை வலுப்படுத்துவதோடு, தொழில்முறை ஒத்துழைப்பைப் பகிர்ந்து கொள்ளவும் வழிவகை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொழும்பில் தங்கியிருக்கும் காலப்பகுதியில், கப்பலில் உள்ள பணியாளர்கள் கொழும்பு நகரில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களைப் பார்வையிடவும், சிநேகபூர்வமான நிகழ்வுகளில் ஈடுபடவும் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.





