காணி உரிமை வழங்கினால் மலையக மக்களின் தலையெழுத்து மாறும்!
“மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்கப்பட வேண்டும். இதற்குரிய நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.”
இவ்வாறு இதொகாவின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் Jeevan Thondaman தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று (21) நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“ பெருந்தோட்ட நிறுவனங்களை நம்ப வேண்டாம் என நான் கூறினேன். அவர்களின் சூழ்ச்சி என்னவென்பது எமக்கு தெரியும்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்கிவிட்டு , தொழிலாளர்கள் பறிக்க வேண்டிய கொழுந்தின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
நாள் சம்பளத்துக்கு 20 கிலோ பறிக்க வேண்டிய நிலையில் சில இடங்களில் அது 26 கிலோவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்க முடியாது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே அரசாங்கத்தின் வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தேன். மாறாக அச்சத்தால் அல்ல.
ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் 2 ஆயிரத்து மேல் அடிப்படை சம்பளம் வேண்டும் என கூறிய தேசிய மக்கள் சக்தியினர், ஆட்சிக்கு வந்த பின்னர் மௌனித்துவிட்டனர்.
அதேவேளை, காணி உரிமை என்பதும், வீட்டு உரிமை என்பதும் வெவ்வேறான விடயங்களாகும். எமது மக்களுக்கு காணி உரிமையை வழங்குங்கள். அவ்வாறு வழங்கினால் சமூகத்தின் தலையெழுத்தையே மாற்ற முடியும்.” – என்றார் ஜீவன் தொண்டமான்.





