பாக் நீரிணையை ‘அறிவுசார் நீரிணையாக’ மாற்றுவோம் ; யாழில் ஆளுநர் அழைப்பு
இந்தியப் பல்கலைக்கழகங்கள் உலகத்தரம் வாய்ந்த கல்வியை, மேற்குலக நாடுகளை விட நான்கில் ஒரு பங்கு செலவிலேயே வழங்குகின்றன என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் இன்று நடைபெற்ற ‘இந்தியாவில் கல்வி’ (Study in India) வழிகாட்டல் கண்காட்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் அனுசரணையில் நடைபெற்ற இந்தக் கண்காட்சியில், இந்தியாவின் 1,300-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இதன்போது ஆளுநர் மேலும் தெரிவிக்கையில், இந்தியா இன்று உலகின் இரண்டாவது மிகப்பெரிய கல்வி மையமாகத் திகழ்வதாகவும், இலங்கை மாணவர்களுக்காக ஆண்டுதோறும் சுமார் 800 புலமைப்பரிசில்கள் வழங்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

2,500 ஆண்டுகால கலாசாரத் தொடர்புகள் காரணமாக, யாழ்ப்பாண மாணவர்கள் இந்தியாவில் கல்வி கற்பது ஒரு இணக்கமான சூழலை வழங்கும் எனத் தெரிவித்த அவர், இரு நாடுகளுக்கும் இடையிலான பாக் நீரிணையை ஒரு ‘அறிவுசார் நீரிணையாக’ மாற்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
இந்தியத் துணைத்தூதுவர் சாய் முரளி உள்ளிட்ட இராஜதந்திரிகள் மற்றும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்ற இந்நிகழ்வு, வடபகுதி இளைஞர்களின் உயர்கல்வி கனவுகளுக்கு ஒரு புதிய பாலமாக அமைந்திருந்தது.





