இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் ஏகே-47 உள்ளிட்ட துப்பாக்கிகள் கண்டெடுப்பு
இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பகுதியான நரோட் ஜெய்மால் சிங் அருகே, பஞ்சாப் காவல்துறையும் மத்திய புலனாய்வு அமைப்புகளும் இணைந்து நடத்திய சோதனையில் பெருமளவிலான ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
பறிமுதல் செய்யப்பட்டவற்றுள் 3 ஏகே-47 ரகத் துப்பாக்கிகள், 2 கைத்துப்பாக்கிகள் மற்றும் 98 தோட்டாக்களுடன் வெடிமருந்துகளும் அடங்கும்.
பஞ்சாப் மாநிலத்தில் வன்முறையைத் தூண்டுவதற்காக இவை எல்லை தாண்டி கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ-யின் ஆதரவுடன் செயல்படும் பயங்கரவாதி ரிண்டா என்பவரே இந்த ஆயுதங்களை அனுப்பியிருக்கலாம் என டிஐஜி சந்தீப் கோயல் தெரிவித்துள்ளார்.
ஆயுதங்கள் சிக்கியதைத் தொடர்ந்து எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், இந்த பயங்கரவாத வலையமைப்பை உடைக்க பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.





