கோவளம் நன்னீர்த் தேக்கத் திட்டத்தை கைவிடுக: சீமான் கடும் எச்சரிக்கை
செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் பகுதியில் தமிழக அரசு செயல்படுத்தத் திட்டமிட்டுள்ள புதிய நன்னீர்த் தேக்கத் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், 471 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும் இத்திட்டம், 16-க்கும் மேற்பட்ட மீனவக் கிராமங்களின் வாழ்வாதாரத்தையும், அந்தப் பகுதியின் சூழலியல் கட்டமைப்பையும் வேரறுக்கும் எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாரம்பரிய மீன்பிடி இடங்களை ‘வெற்று நிலம்’ எனத் தவறாகக் காட்டி அனுமதி பெறப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள அவர், பக்கிங்காம் கால்வாயின் போக்கை மாற்றுவது மழைக்காலங்களில் பெரும் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளார்.
உப்பங்கழிகளை அழிப்பதற்குப் பதிலாக, ஏற்கனவே உள்ள ஏரிகளைத் தூர்வாரிப் பராமரிப்பதன் மூலம் சென்னையின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும் என்றும், அழிவுப் பாதையைத் தவிர்த்து மாற்று வழிகளில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றும் சீமான் கேட்டுக்கொண்டுள்ளார்.





