நைல்நதி நீர் தொடர்பான பிரச்சினையில் மத்தியஸ்தம் வகிக்க தயார் ; அமெரிக்க ஜனாதிபதி
நைல் நதி நீர் பங்கீடு தொடர்பாக எகிப்து மற்றும் எத்தியோப்பியா நாடுகளுக்கிடையே நிலவி வரும் நீண்டகாலப் பிரச்சினையைத் தீர்க்க, தான் மத்தியஸ்தம் வகிக்கத் தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எகிப்து ஜனாதிபதி அப்தெல் ஃபத்தா அல்-சிசிக்கு அவர் அனுப்பியுள்ள விசேட கடிதத்தில், இரு நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவுகளைப் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.
நைல் நதியின் துணை நதியில், எத்தியோப்பியா சுமார் 5 பில்லியன் டொலர் செலவில் பிரம்மாண்டமான அணையொன்றை (GERD) நிர்மாணித்து முடித்துள்ளது.
கடந்த செப்டம்பரில் இதன் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில், எகிப்து இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.
இந்த அணையின் கட்டுமானம் சர்வதேச நீர் ஒப்பந்தங்களை மீறுவதாகவும், இதன் காரணமாக வருங்காலங்களில் எகிப்தில் கடும் வறட்சி அல்லது திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் எகிப்து கவலை வெளியிட்டுள்ளது.





