“புதுப் படங்களுக்கு வழிவிடுங்கள்” – தயாரிப்பாளர்களின் கோரிக்கைக்குப் பணிந்த கலைப்புலி எஸ். தாணு!
தளபதி விஜய்யின் கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’ சென்சார் சிக்கலால் பொங்கல் ரிலீஸிலிருந்து தள்ளிப்போனது. இதனால் ரசிகர்களை உற்சாகப்படுத்த, கலைப்புலி எஸ். தாணு தனது தயாரிப்பில் உருவான பிளாக்பூஸ்டர் ஹிட் படமான ‘தெறி’ திரைப்படத்தை ஜனவரி 15 (பொங்கல் அன்று) மீண்டும் வெளியிடப் போவதாக அறிவித்திருந்தார்.
ஆனால், தற்போது அந்த ரீ-ரிலீஸும் ஒத்திவைக்கப்படுவதாகத் தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
பொங்கலுக்குப் போட்டியாகத் திரையரங்குகளில் வெளியாகும் கார்த்தியின் ‘வா வாத்தியார்’, ஜீவாவின் ‘தலைவர் தம்பி தலைமையில்’ மற்றும் மோகன் ஜியின் ‘திரௌபதி 2’ ஆகிய புதிய படங்களின் தயாரிப்பாளர்கள் தாணுவிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தனர். ‘தெறி’ போன்ற ஒரு மாஸ் படம் ரீ-ரிலீஸ் ஆனால் தங்களின் புதிய படங்களுக்குத் திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதனால் சக தயாரிப்பாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, “புதிய படங்களின் தயாரிப்பாளர்கள் கேட்டுக்கொண்டதால், ‘தெறி’ ரீ-ரிலீஸைத் தள்ளிவைக்கிறோம்” எனத் தாணு தனது ‘X’ (Twitter) தளத்தில் தெரிவித்துள்ளார்.
‘தெறி’ திரைப்படம் பெரும்பாலும் ‘ஜனநாயகன்’ திரைக்கு வந்த பிறகே மீண்டும் வெளியாகும் எனத் தெரிகிறது.





