அயோத்திக்குள் முஸ்லிம்கள் நுழையத் தடை: கோரிக்கை முன்வைப்பு!
முஸ்லிம் மக்கள், அயோத்தியில் நுழைவதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின், உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோயில் அமைந்துள்ளது.
இக்கோயிலைக் காண முஸ்லிம்களும் அனுமதிக்கப்படுகின்றனர். எனினும், கருவறைக்குள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை.
இந்நிலையில் ராமர் கோயிலில் கடந்த வாரம் முஸ்லிம் இளைஞர் ஒருவர், சால்வை விரித்து தொழுகையில் ஈடுபட முயற்சித்தார்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு தரப்பினர் இளைஞரை தடுத்து நிறுத்தினர். விசாரணைக்கு பிறகு அவர் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.
இந்த சம்பவம் அயோத்தியைச் சேர்ந்த துறவிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து முஸ்லிம்கள் அயோத்தியில் நுழையத் தடை விதிக்க வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.
இது குறித்து அயோத்தியின் துறவிகள் சங்கம் அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
“ ராம ஜென்மபூமி கோயில் கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையின் ஆதாரமாக உள்ளது. அங்கு மத உணர்வுகளைப் புண்படுத்தும் எந்தச் செயலையும் சகித்துக்கொள்ள முடியாது.
சூழலைக் கெடுப்பதற்கும் சமூக நல்லிணக்கத்திற்குப் பங்கம் விளைவிப்பதற்கும் திட்டமிட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க, கோயில் வளாகத்தில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை வலுப்படுத்த வேண்டும்.
முஸ்லிம் சமூக உறுப்பினர்களுக்கு அயோத்தியில் தடை விதிக்க வேண்டும்” எனவும் மேற்படி கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.





