குடிநீர் இன்றி தவிக்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள்: கென்ட் பகுதியில் அவசர நிலை பிரகடனம்
பிரித்தானியாவின் சசெக்ஸ் (Sussex) மற்றும் கென்ட் (Kent) பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் குடிநீர் இன்றி வாரத்தின் முதல் நாளைத் தொடங்கியுள்ளனர்.
நிலைமை மோசமடைந்துள்ளதைத் தொடர்ந்து, கென்ட் கவுன்சில் இதனை ஒரு “பாரிய அனர்த்தமாக” (Major Incident) அறிவித்துள்ளது.
கோரெட்டி (Goretti) புயல் மற்றும் மின்சாரத் தடை காரணமாக நீரேற்று நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளதே இதற்குக் காரணம் என ‘சவுத் ஈஸ்ட் வாட்டர்’ (South East Water) நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனால் கிழக்கு கிரின்ஸ்டெட் (East Grinstead) மற்றும் டன்பிரிட்ஜ் வெல்ஸ் (Tunbridge Wells) உள்ளிட்ட பல பகுதிகளில் பாடசாலைகளும் நூலகங்களும் மூடப்பட்டுள்ளன.
குடிநீர் இன்றி மக்கள் சுகாதாரச் சீர்கேடுகளுக்கு முகம் கொடுத்து வரும் நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரை விநியோகிக்க விசேட மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
எனினும், செவ்வாய்க்கிழமை வரை நீர் விநியோகம் சீராக வாய்ப்பில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
தனியார்மயமாக்கப்பட்ட நீர் நிறுவனங்கள் பொறுப்புக்கூறத் தவறிவிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் விமர்சித்துள்ளனர்.
வைத்தியசாலை சேவைகள் பாதிக்கப்படாமல் இருக்க தண்ணீர் டாங்கிகள் மூலம் நீர் விநியோகிக்கப்படுவதுடன், ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.





