சுவிட்சர்லாந்து விபத்து: தீப்பிழம்புகளால் உருவான திடீர் வெடிப்பு – பாதுகாப்பு அதிகாரி புதிய தகவல்.
சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் உள்ள புகழ்பெற்ற கிரான்ஸ்-மொன்டானா (Crans-Montana ) நகரில் உள்ள ‘லே கான்ஸ்டலேஷன்’ (Le Constellation) என்ற மதுபான விடுதியில் (Bar), ஜனவரி 1, 2026 அன்று அதிகாலை சுமார் 1:30 மணி அளவில் இந்த விபத்து நிகழ்ந்தது.
புத்தாண்டைக் கொண்டாட நூற்றுக்கணக்கான இளைஞர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அங்கு கூடியிருந்தபோது இந்தத் துயரம் நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்து சுவிட்சர்லாந்து வரலாற்றிலேயே மிக மோசமான பேரிடர்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இந்த விபத்தில் சுமார் 40 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும் 115-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இவர்களில் பலரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் 16 முதல் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என்று சொல்லப்படுகிறது. இதில் இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டுப் பயணிகளும் அடங்குவர்.
இந்த விபத்துக்கான அதிகாரப்பூர்வ காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது, எனினும் சில முக்கியத் தகவல்கள் கிடைத்துள்ளன:
விபத்து எப்படி நடந்தது என்பது பற்றி நேரில் பார்த்தவர்கள் கூறுகையில் விடுதி ஊழியர்கள் ஷாம்பெயின் (Champagne) பாட்டில்களில் பட்டாசு போன்ற ‘ஸ்பார்க்லர்களை’ (Sparklers) ஏந்தி வந்தபோது, அதன் நெருப்புத் துண்டுகள் மரத்தாலான மேற்கூரையில் (Ceiling) பட்டு தீப்பிடித்ததாகச் சாட்சிகள் கூறுகின்றனர்.
மேலும் தீ விபத்து ஏற்பட்டவுடன் மக்கள் அலறியடித்துக்கொண்டு வெளியேற முயன்றனர். குறிப்பாக அடித்தளத்தில் (Basement) இருந்தவர்கள் குறுகலான படிக்கட்டுகள் வழியாக வெளியேற முயன்றபோது பெரும் கூட்ட நெரிசலும் எட்டப்பட்டுள்ளது.
எனினும் ஆரம்பத்தில் இது ஒரு வெடிகுண்டு தாக்குதல் எனச் சந்தேகிக்கப்பட்டது, ஆனால் இது ஒரு விபத்துதான் என்பதைப் போலீசார் உறுதி செய்துள்ளனர். ‘எம்பிரேஸ்மென்ட் ஜெனரலைஸ்’ (Embrasement Généralisé) எனப்படும் வாயுக்களால் ஏற்படும் திடீர் தீப்பிழம்பு (Flashover) காரணமாக இந்த விபத்து தீவிரம் அடைந்ததாகக் கருதப்படுகிறது.
இந்த தீவிபத்து ஏற்பட்ட வாலாய்ஸ் (Valais) மாகாணத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 13 ஹெலிகாப்டர்கள் மற்றும் 42 ஆம்புலன்ஸ்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
இன்று சுவிஸ் அதிபர் கை பார்மெலின் (Guy Parmelin) நாட்டு மக்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் நாடு முழுவதும் 5 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து நடந்த பகுதியைச் சுற்றி விமானப் போக்குவரத்துத் தடை (No-fly zone) விதிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து மேலும் ஆழமான விசாரணை நடைபெற்று வருகிறது. உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காண சில நாட்கள் ஆகலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





