புலிகள் அமைப்பை மீளக் கட்டியெழுப்புவேன்: அர்ச்சுனா சர்ச்சை கருத்து!
புலிகள் அமைப்பை மீளக் கட்டியெழுப்புவதானால் அதனை நான்தான் செய்வேன் என்று சர்ச்சைக்குரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா Ramanathan Archuna.
கொழும்பில் இன்று (29) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“புலிகள் அமைப்பை மீள உருவாக்குவதானால் அதனை நான் தான் செய்வேன். சொல்லிவிட்டுதான் நான் அதை செய்வேன். எவருக்கும் அச்சம் ஏற்படாத வகையிலேயே அதனை நான் செய்வேன்.
சில தமிழ்க் கட்சிகளின் செயற்பாடுகளை வைத்துக்கொண்டு சிங்கள மக்கள், தமிழர்களை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கக்கூடாது.
சிங்கள மக்களுக்கு எதிராக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் தமிழ் மக்களுக்கு இல்லை. அவர்கள் விகாரையை உடைக்க முற்படவும் இல்லை.
பிரபாகரன் இருந்திருந்தால்கூட விகாரைமீது தாக்குதல் நடத்துமாறு கூறி இருக்கமாட்டார். எனினும், எதிர்வரும் 03 ஆம் திகதி தையிட்டி விகாரைக்கு எதிராக செயல்படுவதற்கு சில தரப்பு முற்படுகின்றது.
தையிட்டி விகாரை உடைக்கப்படும் என்ற பிரச்சாரமும் முன்னெடுக்கப்படுகின்றது. தமிழ் மக்கள் அங்கு செல்லமாட்டார்கள். சாராணத்துக்கும், கொத்து ரொட்டிக்கும் செல்லும் கூட்டமொன்று உள்ளது. அந்த கூட்டம் அங்கு செல்லக்கூடும்.” – என்றார் அர்ச்சுனா எம்.பி.
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, அரசியல் களத்தில் சர்ச்சைக்குரிய அரசியல்வாதியாகவே வலம் வருகின்றார். ஊடகங்களின் பார்வை தம்பக்கம் திரும்ப வேண்டும் என்பதற்காக பல சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டுவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.





