கணக்காய்வாளர் நாயகம் நியமனத்தில் இழுபறி நிலை: பின்னணி என்ன?
தமக்கு விசுவாசமான ஒருவரை கணக்காய்வாளர் நாயகம் Auditor General பதவிக்கு நியமிப்பதற்கு அரசாங்கம் முற்படவில்லை என்று பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க Mahinda Jayasinghe தெரிவித்தார்.
கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு, இராணுவ அதிகாரி கேணல் ஓ. ஆர்.ராஜசிங்கவை நியமிப்பதற்கு ஜனாதிபதி பரிந்துரைத்திருந்தார்.
இந்த பரிந்துரையை அரசமைப்பு சபை நிராகரித்துள்ளது. இதற்கு முன்னர் ஜனாதிபதியால் வழங்கப்பட்ட பரிந்துரையும் நிராகரிக்கப்பட்டது.
இதனால் நாட்டில் கணக்காய்வாளர் பதவிக்கு வெற்றிடம் நிலவுகின்றது. தமக்கு விசுவாசமானவரை நியமிக்கும் நோக்கிலேயே அரசாங்கம் இழுபறி நிலையை கையாள்கின்றது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது பற்றி பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்கவிடம் வினவப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர்,
“எந்தவொரு பதவிக்கும் அரசாங்க விசுவாசி என எவரும் நியமிக்கப்படவில்லை. சிறப்பாக செயல்படக்கூடிய அதிகாரிகளையே நாம் நியமித்துவருகின்றோம்.
எனவே, விசுவாசிகள் எனக் கூறப்படும் தரப்பினரை நியமித்து தனிப்பட்ட நலன்களை பெறுவதற்குரிய தேவைப்பாடு ஆளுங்கட்சியினருக்கு கிடையாது. அரசமைப்பு பேரவையே அனுமதி வழங்காமல் உள்ளது.
நாடு சிறப்பான வழியில் பயணிப்பது சிலருக்கு கடுப்பை ஏற்படுத்தக்கூடும். அதனால் இப்படியான காலை வாரும் செயலில் சிலர் ஈடுபடக்கூடும்.” – என்று குறிப்பிட்டார்.





