பென்சில்வேனியாவில் கோர விபத்து: முதியோர் இல்லத்தில் வெடிப்பு மற்றும் தீயினால் இருவர் பலி
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர வெடிப்பு மற்றும் தீ விபத்தில் சிக்கி குறைந்தது இருவர் உயிரிழந்துள்ளனர்.
பிரிஸ்டல் நகரில் உள்ள ‘சில்வர் லேக்’ (Silver Lake) முதியோர் இல்லத்தில் நேற்று பிற்பகல் எரிவாயு கசிவு குறித்து அதிகாரிகள் சோதனையிட வந்தபோது, இந்த வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொலிஸார் ஜன்னல்கள் மற்றும் மின்சார ஏணிகள் வழியாக முதியவர்களை மீட்டனர்.
ஒரு பொலிஸ் அதிகாரி இருவரைத் தனது தோளில் சுமந்து கொண்டு ஓடி வந்து காப்பாற்றியது அங்கிருந்தோரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த ஐந்து பேரின் நிலை இன்னும் தெரியவில்லை எனத் தெரிவித்துள்ள ஆளுநர் ஜோஷ் ஷாபிரோ, மீட்புப் பணிகள் தொடர்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கட்டிடத்திற்குள் சிக்கியிருக்க வாய்ப்புள்ள ஏனையோரை மீட்கும் பணிகளில் அவசர சேவைப் பிரிவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.





