சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை குறிவைக்கும் தயாசிறி!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியில் மாற்றம் அவசியம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர வலியுறுத்தியுள்ளார்.
தற்போதைய தலைவர் நிமல் சிறிபாலடி சில்வா தலைமையில் கட்சியை கட்டியெழுப்ப முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது மூன்று அணிகளாக பிளவுபட்டிருந்தன. நிமல் சிறிபாலடி சில்வா அணி, தயாசிறி தரப்பு மற்றும் மைத்திரி குழு என பிரிந்து செயல்பட்டுவந்தனர்.
இந்நிலையில் நிமல் சிறிபாலடி சில்வா அணியும், மைத்திரி தரப்பும் இணைந்துள்ளன. இதனையடுத்தே விஜயதாச ராஜபக்சவுக்கு உப தலைவர் பதவி வழங்கப்பட்டது.
எனினும், தான்தான் கட்சியின் சட்டப்பூர்வமான செயலாளர் என தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுவருகின்றார்.
விஜயதாச ராஜபக்சவுக்கு வழங்கப்பட்ட நியமனத்தையும் சவாலுக்குட்படுத்தியுள்ளார்.
இந்நிலையிலேயே தலைமைப்பதவியில் மாற்றத்தை வலியுறுத்தியுள்ளார் தயாசிறி ஜயசேகர.
“ கிராமிய மட்டத்தில் சுதந்திரக்கட்சி விழுந்துள்ளது. தலைமைத்துவ மாற்றம் இன்றி அதனை கட்டியெழுப்ப முடியாது.” – எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமைப் பதவியை தனக்கு வழங்குமாறும் அவர் யோசனை முன்வைத்துள்ளார்.
தவிசாளர் பதவியை நிமல் சிறிபாலடி சில்வாவுக்கு வழங்க முடியும் எனவும் அவர் பரிந்துரைத்துள்ளார்.





