இராணுவத் தளபதி படுகொலை: உக்ரைன் உளவுத்துறை மீது ரஷ்யா நேரடி குற்றச்சாட்டு
ரஷ்யாவின் தென்மேற்கு மாஸ்கோவில் இன்று காலை நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பில், அந்நாட்டின் உயர்மட்ட இராணுவ அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் ஃபனில் சர்வரோவ் (Fanil Sarvarov) கொல்லப்பட்டுள்ளார்.
ரஷ்ய ஆயுதப் படைகளின் செயல்பாட்டுப் பயிற்சிப் பிரிவின் தலைவராக இருந்த இவரது காரின் அடியில் வைக்கப்பட்டிருந்த வெடிபொருள், காலை 7 மணியளவில் வெடித்ததில் அவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலின் பின்னணியில் உக்ரைனிய உளவு அமைப்புகள் இருக்கலாம் என்ற கோணத்தில் ரஷ்யாவின் புலனாய்வுக் குழு விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் ரஷ்யாவின் அணுசக்தி மற்றும் உயிரியல் பாதுகாப்புப் படைத் தளபதி இதே போன்றதொரு தாக்குதலில் கொல்லப்பட்டிருந்த நிலையில், தற்போது நிகழ்ந்துள்ள இந்தப் படுகொலை ரஷ்ய இராணுவ வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





