எல்லைப்புற கிராமங்கள் குறித்து வடக்கு ஆளுநர் விடுத்துள்ள பணிப்பு!
வடக்கு மாகாணத்தின் எல்லைப்புறங்கள் மற்றும் காடுகளால் சூழப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்கள் எவற்றையும் விடுத்துவிடாது, அனைத்துப் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தும் வகையில் முழுமையான திட்டங்களை வகுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுநர் செயலகத்தில் இன்று நடைபெற்ற, 2026ஆம் ஆண்டுக்கான திட்ட முன்மொழிவுகளை ஆராயும் விசேட கூட்டத்திலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்படி: விவசாயத் திணைக்களத்திற்கு 619 மில்லியன் ரூபாவும், நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கு 604 மில்லியன் ரூபாவும், கால்நடைத் துறைக்கு 377 மில்லியன் ரூபாவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீடுகள் வெறும் உள்ளூர் தேவையைப் பூர்த்தி செய்வதோடு நின்றுவிடாமல், மேலதிக உற்பத்தியை ஏற்படுத்தி ஏற்றுமதி செய்யும் நிலைக்கு மாகாணத்தை உயர்த்த வேண்டும் என்று ஆளுநர் வலியுறுத்தினார். மேலும், அண்மைய அனர்த்த பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு, ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட திட்டங்களில் உரிய மாற்றங்களை விரைவாகச் செய்து இறுதிப்படுத்துமாறும் அவர் இதன்போது அறிவுறுத்தினார்.





