இலங்கைக்கான இந்திய தூதுவரை ஜீவன் அவசரமாக சந்தித்தது ஏன்?
இலங்கைக்கான இந்திய தூதுவருக்கும், இதொகாவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமானுக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பில் இன்று (16) நடைபெற்றது.
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இந்தியா வழங்கிய உதவிகளுக்கு ஜீவன் தொண்டமான் இதன்போது நன்றி தெரிவித்தார் என்று இந்திய தூதரகத்தின் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
அத்துடன், பேரிடரால் பெருந்தோட்டப்பகுதிகள் உட்பட மலையகத்தில் ஏற்பட்டுள்ள நிலை தொடர்பில் இந்திய தூதுவருக்கு ஜீவன் தொண்டமான் தெளிவுபடுத்தியுள்ளார்.
இலங்கை மீண்டெழுவதற்கு இந்தியா தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும் என ஜீவன் தொண்டமானிடம் இந்திய தூதுவர் உறுதியளித்துள்ளார்.
அதேவேளை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் பதவியை ஜீவன் தொண்டமான் எம்.பி. துறக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ள நிலையில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளமை முக்கியத்துவம் மிக்கதாகக் கருதப்படுகின்றது.
இந்தியாவின் தலையீட்டுடனேயே இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் உதயமானது என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் அதன் பெயர் இலங்கை, இந்திய காங்கிரஸாகவே இருந்தது.
எனவே, அரசியல் முக்கியத்துவமிக்க தீர்மானங்களை எடுக்கும்போது இதொகா இந்திய ஆலோசனைகளையும் பெறுவது வழமையான நடைமுறையாக இருந்துவருகின்றது.





