இந்தியாவில் 11 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து – 13 பேர் பலி!
இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் உள்ள யமுனா விரைவுச்சாலையில் (Expressway) பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஏறக்குறைய 13 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விபத்து நேற்று இடம்பெற்றுள்ளது.
அடர்ந்த மூடுபனி காரணமாக ஏறக்குறைய எட்டு பேருந்துகள் மற்றும் மூன்று கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மோதலைத் தொடர்ந்து, வாகனங்கள் தீப்பிடித்து எரிந்ததால் பயணிகள் உள்ளே சிக்கிக்கொண்டதாகவும், அவர்கள் வெளியே வர முடியாமல் உயிரிழந்துள்ளதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவசர சேவைகள் விரைவாக செயல்பட்டு, மீட்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி இழப்பீடும் அறிவித்துள்ளார்.
விபத்து குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





