போண்டி துப்பாக்கிச்சூட்டு தாக்குதல் – 59 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் தாக்குதல்தாரி!
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள போண்டி கடற்கரையில் (Bondi Beach) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய தாக்குதல்தாரிக்கு எதிராக 59 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இரண்டு தாக்குதல்தாரிகளில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், மற்றொரு தாக்குதல்தாரியான 24 வயதுடைய நவீத் அக்ரம் காவல்துறையினரின் கண்காணிப்பில் உள்ளார்.
அவர் மீது 15 கொலைக் குற்றச்சாட்டுகள், பயங்கரவாதக் குற்றம் மற்றும் கொலை செய்யும் நோக்கத்துடன் ஒரு நபருக்கு காயம்/கடுமையான உடல் ரீதியான தீங்கு விளைவித்தல் தொடர்பான 40 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஆயுதம் ஏந்தியதாகவும், தடைசெய்யப்பட்ட பயங்கரவாதக் குழுவின் சின்னத்தைக் காட்டியதற்காகவும், ஒரு கட்டிடத்தில் அல்லது அதற்கு அருகில் வெடிக்கும் சாதனத்தை வைத்திருந்தமைக்காகவும் அவர் தண்டனையை எதிர்நோக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தாக்குதலில் உயிரிழந்த 15 பேரின் இறுதிச் சடங்கு நிகழ்வுகள் இடம்பெற்று வருவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





